ஸெளந்தர்யலஹரி 42--50
அழகின் ஆனந்த அலைகள்
ஸெளந்தர்யலஹரி 42
____________________________________
.கிரீட வர்ணனை
கதைர் மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ர கடிதம்
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:
ஸ நீடேயச்சாயா ச்சுரண ஶபலம் சந்த்ர ஶகலம்
தனு: ஶௌனாஸீரம் கிமிதி ந நிபத்னாதி திஷணாம் !!
இமயமலையின் பெண்ணே ! மாணிக்கங்களாக உன் சேவையின் பொருட்டு உருவடைந்துள்ள பன்னிரண்டு ஆதித்தியர்களால் நெருக்கமாக இழைக்கப்பட்ட உன்னுடைய தங்கக் கிரீடத்தை எவன் வர்ணிக்கப் புகுகிறானோ அவன் கிரீடகோளத்தில் உள்ள மாணிக்கங்களின் காந்தியால் விசித்திரவர்ணம் உள்ளதாகத் தோன்றும் சந்திரகலையை இந்திரனுடைய வில் என்ற கருத்தை வர்ணனையில் எப்படிப் புருத்தாமல் இருக்க முடியும் ?
பன்னிரெண்டு ஆதித்யர்கள் :-
1) அம்சமான் ,2)தாதா 3) சவிதா 4) அரியமான் 5)விஸ்வான் 6)பகன் 7)பர்ஜன் 8) துவஷ்டா
9) மித்திரன் 10)விஷ்ணு ,11) வருணன்
12 பூஷா
கைலாஸத்தில் ஆசார்யாளுக்கு ஈச்வரன் தந்த பஞ்ச லிங்கங்களுக்கு சந்திரமௌளீச்வரர் என்றே பெயர்.
ஈஸ்வரன் தன் தலையில் சந்திரனை அணிந்திருப்பது போல அம்பாளும் அணிந்திருக்கிறாள்.
சந்திரமௌளீச்வரர் ஈச்வர ஸ்வரூபம் என்பதுபோல இந்த ஸ்தோத்திரமும் அம்பாளுடைய ஸ்வரூபமே ...
ஆகையால் அவளைச் சந்திரமௌளீச்வரியாக வர்ணிப்பதிலேயே ஆரம்பிப்பது ரொம்பவும் பொருத்தமாயிருக்கிறது.
அன்னைக்கு "அஷ்டமிச் சந்த்ர விப்ரபா" என்ற நாமம் இருப்பதை நாம் அறிவோம்.
இவ்வாறாக அன்னையின் கிரீடத்தில் உள்ள சந்த்ரன் வெண்மையாக இருந்தாலும், அவளது கிரீடத்தில் இழைக்கப்பட்டிருக்கும் மற்ற நவரத்னங்களான பன்னிரு ஆதித்யர்களது ஒளியால் பல வர்ணங்களில் ஜகஜ்வலிக்கும் இந்திர தனுசு போன்று காட்சியளிக்கிறதாம்.
இதுவே "ஐந்த்ரஸ்யேவ சராஸனஸ்ய தததீ மத்யேலலாடம் ப்ரபாம்" என்று லகுஸ்துதியில் சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கே த்வாதச ஆதித்யர்கள் அம்பாளுக்கு அருகில் இருந்து சேவை செய்கிறார்கள்
அநேக ஸூர்யர்களைச் சொல்லியிருந்தாலும் அவற்றின் பிரகாசமும் முடிவாகப் போய்ச் சேருகிற சந்திரனுக்குத்தான் சிறப்பு!
அதாவது ஜகன்மாதாவை சந்திரமௌளீச்வரியாக தரிசனம் பண்ணி வைத்திருப்பதே சிறப்பு.
இனிவரும் ஐம்பத்தொன்பது சுலோகங்கள் ஸௌந்தர்ய லஹரீ – ஸ்ரீ சங்கராசாரியார் அருளியது.
___________________________________________
#ஸெளந்தர்யலஹரி-43
_______________________________
கேச வர்ணனை
துனோது த்வாந்தம் நஸ் துலித தலிதேந்தீவர வனம்
கன ஸ்நிக்த ஶ்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ ஶிவே
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜ முபலப்தும் ஸுமநஸோ
வசந்த்யஸ்மின் மன்யே வலமதன வாடீ விடபினாம்
பரமசிவ பத்தினியே ! மலர்ந்த கறுநெய்தல் காடுபோல் பிரகாசிப்பதாகவும், அடர்ந்தும் வழவழப்பாகவும், மெதுவாகவும் உள்ளதுமான உன்னுடைய கேச பாரம் எங்களுடைய அக இருளை போக்கடிக்கட்டும். அதில் உள்ள இயற்கையான வாசனையை அடைய விரும்பி இந்திரனுடைய நந்தவனத்தில் உள்ள மரங்களின் புஷ்பங்கள் அந்தக் கேசபாரத்தில் வசிக்கின்றன என்று நினைக்கிறேன்.
‘சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத்கசா’ என்ற ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்திற்குப் பொருள் கூறும்போது பாஸ்கரராயர் “புஷ்பங்களின் வாசனையை விட்த் தேவியின் கூந்தலுக்கு இயற்கையாகவே அதிக வாசனை இருப்பதால் அப்புஷ்பங்கள் வெறும் அலங்காரத்திற்காக மட்டும் தரிக்கப் பட்டதாகக் கூறுகிறார். தேவி சூடிக்கொண்டதால் புஷ்பங்களுக்குப் பெருமை. சம்பகம், அசோகம், புன்னாகம், சௌகந்திகம் ஆகிய மலர்களின் வாசத்தை மிஞ்சும் வாசம் நிறைந்த கூந்தல் உடையவள் என்று வர்ணிக்கிறது. இம்மலர்கள், தங்களின் வாசத்தினை பெருக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காக அம்பாளின் தலையில் இருக்கவேண்டும் என்று வேண்டியனவாம். அதற்காக அம்பாள் கருணையோடு அவற்றை தன் தலையில் சூடியுள்ளாள்.
மேலும் ,
"நீல சிகுரா"
அக்ஞான த்வாந்த தீபிகா
என்றெள்ளாம் லலிதா ஸஹஸ்ரநாமம் பகழ்வதையும் காணலாம்.
அபிராமி பட்டரும்
" பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே"
அதாவது
வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய கூந்தலில் சூடியவளே! ஆகிய மூன்று திருக்கண்களை உடையவளே! உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை
என்கிறார்.
அன்னையின் கூந்தலுக்கு இயற்கையாகவே மனம் உண்டு என்பதை நக்கீரர் அறிந்திருந்தாலும், மாயையினால் அவர் அதனை மறுத்தார். சிவபெருமானையும் உத்தேசிக்காது மறுத்தார். அதனை துடைதுக்கொள்ளவே, அடுத்த பிறவியில், நக்கீரர், ஸ்ரீ பாஸ்கரராயராக பிறந்து, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் செய்ததாக கூறப்படுகிறது.
சுகந்த குந்தளாம்பிகை என்பதற்கு
வாசனையுள்ள கூந்தலை உடையவள் என்று பொருள்.
நாகையில் உள்ள ஜராவதேஸ்வரர் கோவில்,
திருவாரூரில் உள்ள ப்ரம்ம புரீஸ்வரர்,
மதுரை செல்லூரில் உள்ள ஆப்புடையார் கோவில்,
இங்கெல்லாம் அம்பாளுக்கு சுகந்த குந்தளாம்பிகை என்று பெயர்.
திருச்சி தாயுமானவர் கோவிலில் அம்பிகைக்கு சுகந்த குந்தளாம்பிகை ( மட்டுவார் குழலியம்மை) என்று பெயர் .
🙏🏼🙏🏼🙏🏼
______________________________________
அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-44
_____________________________________________
வகிட்டின் வர்ணனை:-
தனோது க்ஷேமம் நஸ்தவ வதன ஸௌந்தர்ய லஹரீ
பரீவாஹஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ பார திமிர
த்வஷாம் ப்ருந்தைர் பந்தீக்ருதமிவ நவீனார்க்க கிரணம் !!
உன்னுடைய முகத்தின் அழகுவெள்ளத்தின் பெருக்கானது, வழிந்தோடும் வாய்க்கால் மாதிரி தோன்றுவதும் பலம் மிகுந்த கேச பாரத்தின் இருளாகிய சத்துருக் கூட்டத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட உதய சூரியனுடைய ஒளி போன்ற குங்குமத்தை தரிப்பதும் ஆகிய வகிட்டின் ரேகை எங்களுக்கு க்ஷேமத்தை அளிக்கட்டபண்ணும்
தநோது க்ஷேமம் ந:” – “ந: க்ஷேமம் தநோது” – ‘நம் எல்லோருக்கும் க்ஷேமம் உண்டாக்கட்டும்’ என்று மங்களகரமாக ஆரம்பிக்கிறது.
எது க்ஷேமத்தை உண்டாக்கட்டும்?
‘ஸீமந்த ஸரணி:’ – வகிடு என்கிற கோடு. ‘ஸீமந்தம்’ என்றால் வகிடு. ‘ஸரணி’ என்றால் வழி, பாதை, ரேகை, கோடு, பொழிவு, லஹரி என்று பல அர்த்தம் இடத்துக்கு ஏற்க வரும். இங்கே வகிடு என்கிற கோடு அல்லது ரேகை.
“அம்பாளுடைய வகிடு எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டு பண்ணட்டும்.”
“ஸீமந்தம்” என்று கர்ப்பத்திலிருக்கிற பிரஜைக்கு ஸம்ஸ்காரமாக கர்ப்பிணிக்கு ஒரு சடங்கு பண்ணுகிறோம். இதற்கு ஸரியான பெயர் ‘ஸீமந்தோந்நயனம்’ – ‘ஸீமந்த உந்நயனம்’. ‘உந்நயனம்’ என்றால் மேல்வாக்காக இழுத்துக் கொண்டு போவது.
ஸீமா’ என்றால் எல்லை.அந்தம்’ என்றால் முடிவு. ஸீமா + அந்தம் = ஸீமந்தம். எல்லையின் முடிவாயிருப்பது ‘ஸீமந்தம்’
ஸீமந்தம் எந்த எல்லைக்கு முடிவு? ஒரு ஸ்த்ரீ ரூபத்தின் எல்லைக்குத்தான்
ஒரு சரீரத்திற்கு இரண்டு எல்லைகள் சிரஸும் பாதமும் ஆகும். அதில் சிரஸ் என்கிற எல்லையிலும் – ‘ஸீமா’விலும் – உச்சிக்குழி என்கிற ப்ரஹ்மரந்த்ரமாகிய ‘அந்த’த்திற்குக் கொண்டு போய் முடிப்பது வகிடுதான். அதனால் அதற்கு ‘ஸீமந்தம்’ என்று பெயர். அல்லது தலை மயிர்க்கால்கள் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை எல்லைக்கோடு போட்டாற்போல இரண்டாகப் பிரித்து பாகம் பண்ணியிருப்பதாலும் அந்தப் பெயர் வந்திருக்கலாம்.
மஹாலக்ஷ்மி ஐந்து இடங்களில் நித்யவாஸம் பண்ணுகிறாள். விக்ரஹங்களிலே நாம் ப்ராண ப்ரதிஷ்டா மந்த்ரம் சொல்லித்தான் அவளை வரவழைத்து வஸிக்கப் பண்ண வேண்டியிருக்கிறது. அப்படியில்லாமல் அவளே இயற்கையாக நித்யவாஸம் செய்பவை இந்த ஐந்தும்: தாமரைப் பூ, யானை மஸ்தகம் (முன்னந்தலை), பசுவின் ப்ருஷ்ட பாகம், பில்வ பத்ரத்தின் பின்புறம், ஸுமங்கலிகளின் ஸீமந்தம் என்பவையே இந்த ஐந்து.
ஸுமங்கலிகளுக்கு வகிடான ஸீமந்தம்.
அங்கே ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி – ஸகல ஸௌபாக்ய ஸ்வரூபிணியான தாயார் – வஸிக்கிறாள் என்பதால்தான் அம்பாளுடைய ஸீமந்த ஸரணிக்கே வேறெந்த அவயவத்திற்கும் தராத ஒரு பெருமையை ஆசார்யாள் தந்திருக்கிறார்
அவளுடைய திவ்யமான முகத்திலிருந்துதான் அந்த லஹரி ப்ரவஹிப்பதாகச் சொல்லியிருக்கிறார்” தவ வதந ஸௌந்தர்ய லஹரீ” என்றே சொல்கிறார்.
அம்பாளுடைய கடாக்ஷம், மந்தஹாஸம், மதுர பாஷணம் எல்லாம் அவள் முகத்திலிருந்துதானே கிடைக்கும்? இதனால்தான் அவள் முகத்திலிருந்தே அழகுப் பிரவாஹம் பெருக்கிடுவதாகச் சொல்கிறார்:
தநோதுக்ஷேமம் ந: தவ வதந ஸௌந்தர்ய லஹரீ
“அம்மா! உன் (“தவ” என்றால் ‘உன்னுடைய’) திருமுகத்திலிருந்து பெருகுகிற அழகு வெள்ளம் இருக்கிறதே அது வெறும் அழகு மட்டுமில்லை. அது அருளும் ஆனதால் எங்களுக்கு க்ஷேமத்தை உண்டு பண்ணட்டும்”
அவள் வகிட்டுக் குங்குமத்தை “ஸீமந்த ஸிந்தூரி” என்றே சொல்லியிருக்கிறது. வகிட்டிலே தான் குங்குமம்; நெற்றியில் – அதாவது, திலகமிட்டுக் கொள்ளும் புருவ மத்தியில் – கஸ்தூரிப்பொட்டு என்பதாக அம்பாள் வைத்துக்கொண்டிருப்பதாக ஸஹஸ்ர நாமத்திலிருந்து ஏற்படுகிறது. “முக சந்த்ர களங்காப ம்ருகநாபி விசெஷகா” என்று அதில் நாமா வருகிறது.
“உச்சித் திலகம் என்று இந்த
ஸீமந்த ஸிந்தூரத்தைத்தான் ‘அபிராமி அந்தாதி’ ஆரம்பத்திலேயே பட்டர் சொல்கிறார்.
நவீநார்க கிரணம்’ – ‘அரக்கன்’ என்றால் ஸூர்யன். ‘அர்க கிரணம்’ – ஸூர்ய கிரணம். ‘நவீன’ அர்க்கனாம்! ‘நவீன’ என்றால் ‘புதிய’, ‘பால’. ‘நவீநார்க கிரணம்’ என்றால் உதய ஸூர்ய ரச்மி.
உதிக்கும் கதிரவனின் செங்கதிர்களில் ஒன்றாகத்தான் அம்பாளுடைய ஸிந்தூர ஸீமந்தத்தை ஆசார்யாள் பார்க்கிறார்.
தநோது க்ஷேமம் ந:” என்று மனஸார நினைத்து இந்த ச்லோகத்தைப் பாராயணம், தியானம் பண்ணிக் கொண்டிருந்தோமானால் அம்பாளுடைய அழகு காமாதி அறுபகைக் கூட்டத்தில் (“த்விஷாம் ப்ருந்தை:”) நாம் சிறை வைக்கப்படாமல் (“பந்தீ க்ருதம்” ஆகாமல்) ஆத்மக்ஷேமத்தை அடைந்து லோக க்ஷேமத்தை விருத்தி பண்ணுவதற்கான சக்தியை நமக்கு அநுக்ரஹம் பண்ணும்
#Sathya001
_____________________________________________
#ஸெளந்தர்யலஹரி-45
________________________________
முன் நெற்றி மயிர் வர்ணனை;-
அராலை: ஸ்வபாவ்யா தலிகலப ஸஶ் ரீபி ரலகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ ருசிம்
தரஸ்மேரே யஸ்மின் தஶனருசி கிஞ்ஜல்க ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹன சக்ஷுர் மதுலிஹ: !!
अरालैः स्वाभाव्यादलिकलभसश्रीभिरलकैः
परीतं ते वक्त्रं परिहसति पङ्केरुहरुचिम् ।पङ्केरुहरुचिम्
दरस्मेरे यस्मिन् दशनरुचिकिञ्जल्करुचिरे यस्मिन् दशनरुचिकिञ्जल्करुचिरे
सुगन्धौ माद्यन्ति स्मरदहनचक्षुर्मधुलिहः ॥ ४५॥
புன்சிரிப்பால் சற்று மலர்ந்தாற்போன்றதும், பல்வரிசையாகிற கேசரங்களுடன் பிரகாசிப்பதும் நல்மணமும் உள்ளதும் ஆகிய எந்த முக கமலத்தில் மன்மதனை எரித்த சிவனுடைய கண்களாகிய தேன்வண்டுகள் மயங்குகின்றனவோ அப்படிப்பட்ட உன்னுடைய முகம் இயற்கையாகவே சுருட்டையானதும் சிறு வண்டுகள் சஞ்சரிப்பது போன்ற சோபையைக் கொண்டதுமான முன்நெற்றி மயிர்களால் சூழப்பெற்று தாமரையின் அழகை பரிகசிப்பது போல் இருக்கிறது.
கொஞ்சங் கொஞ்சமாக இதழ் விரிவது தாமரைக்கு அழகு. அம்பாளுடைய மந்த ஸ்மிதம் அதாவது புன்னகை இப்படிக் கொஞ்சங் கொஞ்சமாக மலர்ந்த அழகைக் காட்டுகிறது. அப்போது உள்ளே தெரிகிற பல்வரிசை தாமரைக்குள் தெரிகிற கிஞ்ஜல்கம் (கேஸரம்) போல இருக்கிறது. தாமரை போலவே அம்பாளின் வதனத்துக்கும் ரம்யமான மணம் இருக்கிறது. தாமரைக்குள்ளே தேனைக் குடித்துக்கொண்டு வண்டு புதைந்து கிடக்கும்; மேலும் பல வண்டுகள் அதைச் சுற்றிலும் ஸஞ்சரித்துக் கொண்டிருக்கும். வண்டு நாண் கொண்ட மன்மதனை எவன் கண்ணால் எரித்தானோ அந்தப் பரமேச்வரனின் கண் விழிகளே கருவண்டுகளாகி அம்பாளின் முக கமலத்தில் உள்ள மாதுர்யம் என்னும் மதுவைக் குடிக்கின்றன. முகத்தைச் சுற்றிப் புரளும் முன்னுச்சி மயிரைப் பார்த்தால் ஒரு குட்டி வண்டுப் படையே தாமரையைச் சூழ்ந்திருக்கிற மாதிரி இருக்கிறது.
#Sathya001
_____________________________________________
#ஸெளந்தர்யலஹரி-46
_______________________________
பாதிச் சந்திரன் போன்ற நெற்றியின் வர்ணனை
லலாடம் லாவண்ய த்யுதி விமல மாபாதி தவ யத்
த்வதீயம் தன்மன்யே மகுட கடிதம் சந்த்ரசகலம்
விபர்யாஸ ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர: !!
வெண்ணிலவு போன்ற அழகுடன் உன்னுடைய எந்த நெற்றியானது பிரகாசிக்கிறதோ அதை கிரீடத்தில் சூடிக்கொண்டிருப்பதன் இரண்டாவது பாகமாகிய சந்திரகலையோ என்று எண்ணுகிறேன். இரண்டும் திருப்பிப் பொருத்தப் பட்டால் ஒன்றுக்கொன்று நன்றாகச் சேர்ந்து அமிருதம் ஒழுகும் பூர்ணிமைச் சந்திரனாக பரிணமிக்கும்.
அம்பாளுடைய நெற்றிக் கிரீடத்தில் இருக்கும் பாதிச் சந்திரனைப் பூர்ணமாக்கும் மற்றொரு பாதிபோல் வலைந்தும் அழகாகவும் உள்ளது என்று நெற்றி வர்ணிக்கப் படுகிறது.
அம்பாளுடைய அரை வட்டமான நெற்றியைப் பார்த்தால் அதுவும் ஒரு பாதி சந்திரன் போலவே இருக்கிறது. நடுவே தோண்டியெடுத்திருக்கவில்லை. அசல் அர்த்த சந்திரனாகவே தோன்றுகிறது. இப்படி மேலே பாதி சந்திரன் பிறை வடிவில், அதன் கீழே பாக்கி பாதி சந்திரன் லலாட வடிவில்.
லலிதா ஸஹஸ்ரநாமம்-
அஷ்டமீ சந்த்ர விப்ராஜ தளிக ஸ்த்தல சோபிதாயை நம:” அரைவட்ட வடிவமான அஷ்டமிச் சந்திரன் போல் விளங்கும் நெற்றியைக் கொண்டவளுக்கு நமஸ்காரம் என கூறுவதை காணலாம்.
#Sathta001
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
____________________________________________
#ஸெளந்தர்யலஹரி-47
__________________________________
புருவங்களின் அழகு :-
ப்ருவௌ புக்னே கிஞ்சித்புவன பய பங்கவ்யஸநிநி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர ருசிப்யாம் த்ருத குணம்
தனுர் மன்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்ட்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர-முமே:!
भ्रुवौ भुग्ने किंचिद्भुवनभयभङ्गव्यसनिनि
त्वदीये नेत्राभ्यां मधुकररुचिभ्यां धृतगुणम् ।धृतगुणम्
धनुर्मन्ये सव्येतरकरगृहीतं रतिपतेः
प्रकोष्ठे मुष्टौ च स्थगयति निगूढान्तरमुमे ॥ ४७॥
உமாதேவியே ! உலகபயத்தைப் போக்குவதில் ஊக்கம் உள்ளவளே ! சற்று வளைந்த உன்னுடைய புருவங்கள் வண்டுகள் போல் பிரகாசிக்கின்ற கண்களால் நாண் பூட்டியதாகவும், இடதுகையால் பிடிக்கப் பட்டு முழங்கையாலும் விரல் முஷ்டியாலும் மறைக்கப் பட்டதால் மத்தியபாகம் தெரியாததாகவும் உள்ள மன்மதனுடைய வில் என்று எண்ணுகிறேன்.
மன்மதனது வில்லில் 'மெளர்வி மதுகரமயீ'' என்பதாக (இங்கே) அதாவது வண்டுகளே நாணாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
இந்தப் பாடலில் அந்த வண்டுகளாக அன்னையின் கண்விழியசைவினைச் சொல்கிறார்.
காதுவரை நீண்ட மீன் போன்ற கண்களில் (மீனாக்ஷி) கருவண்டு போன்ற கருவிழிகள் ஒரு முனையிலிருந்து இன்னொன்றுக்குப் போய்வருவது நாண் போன்ற தோற்றத்தை தருகிறதாம்.
சாதாரணமாக வில்லில் இருந்து அம்பு எய்வதற்கு முயலும் போது இடது கரத்தில் வில்லும், அம்பினை வலது கரத்திலும் வைத்துக் கொள்வதே முறை..
இங்கே தெளிவாக வலது (ஸவ்யேதரகர) கரத்தில் வில்லை வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
வில்லை வலதுகையினால் பிடித்தால்தான் அதன் நாண்கள் முழங்கைகளால் மறைக்கப்படும், இடதுகையில் அம்பெய்யும் விதமாகப் பிடித்தால் நாண்கள் மறைந்திருக்காது, அப்படியே மறைந்திருப்பதைக் காண முயன்றாலும் புருவ மத்தியானது விரல்களால் ஏற்படும் சுருங்கிய தோற்றம் தராது, புறங்கையினையொத்த இடைவெளி போன்றே தோன்றும்.
சகல உலகங்களுக்கும் பயத்தினைப் போக்கும் விதமாக புருவங்களை சற்றே நெரிப்பதால் தோற்றம் தருவதானது, நாணேற்றிய வில்லுக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது
#Sathya001
_____________________________________________
#ஸெளந்தர்யலஹரி-48
_________________________________
கண்களின் அழகு
அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயன மார்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே
ஸ்ருஜதி ரஜனீ நாயகதயா
த்ருதீயா த்ருஷ்டிர் தரதலித ஹேமாம்புஜ – ருசி:
உன்னுடைய வலது கண் சூரியவடிவு ஆனதால் பகலை உண்டாக்குகிறது. உன்னுடைய இடது கண் சந்திரவடிவு ஆனதால் இரவை உண்டாக்குகிறது. உன்னுடைய மூன்றாவது கண் சிறிது மலர்ந்த பொற்றாமரையைப் போல் விரகாசிப்பதால் பகலுக்கும் இரவுக்கும் நடுவில் உள்ள ஸந்தியா காலத்தை உண்டாக்குகிறது.
அம்பாளுடைய கண்களினாலயே பகல் , இரவு, ஸந்த்யை ஏற்படுவதால் அம்பாள் காலத்தை கடந்தவள் என்று அர்த்தம்
இந்தச் சிவந்த நெற்றிக் கண்ணானது, “திவஸ நிசயோ:” – ‘பகலுக்கும் இரவுக்கும்’: “அந்தர சரீம்” – நடுவிலே வருவதான’; “ஸந்த்யாம்” – ‘ஸந்தியா காலத்தை’; “ஸமாதத்தே” – அழகாக உண்டாக்குகிறது!
அம்பாளுடைய வலது, இடது நேத்ரங்கள் பகலையும் இரவையும் உண்டாக்கினால் இந்த நேத்ரங்களுக்கு மத்தியில் உள்ள நெற்றிக்கண், இந்த இரண்டு வேளைகளுக்கு மத்தியில் உள்ள ஸந்த்யா காலத்தை ஸ்ருஷ்டிக்கத்தானே வேண்டும்? அந்தி-ஸந்தி ஆகாசத்தின் சிவப்பு மாதிரியே நெற்றிக்கண்ணின் கலரும் பொற்சிகப்பாக இருப்பதால் அதுதான் ஸந்தியா காலத்தைப் பிறப்பிக்கிறது என்பதில் ஸந்தேஹமில்லை.
அம்பாள் காலஸ்வரூபிணி என்பதை இந்த ச்லோகத்தில் அவள் கண்களைக் கொண்டே விளக்கியிருக்கிறார்.
எல்லாக் கண்களிலும் பொதுவாக உள்ள செவ்வரிகள், வெள்ளை விழி, கறுப்பு விழி என்கிறவைகளின் மூன்று வர்ணங்கள் முறையே ரஜஸ், ஸத்வம், தமஸ் என்று மூன்று குணங்களுக்கு ஆச்ரயமாக இருப்பதாகவும், இவற்றிலிருந்தே பிரளயத்துக்குப் பிற்பாடு மறுபடி பிரபஞ்ச வியாபாரம் ஏற்படுவதற்காக அவள் ரஜோமய பிரம்மா, ஸத்வப் பிரதானமான விஷ்ணு, தமோ மூர்த்தியான ருத்ரன் மூவரையும் படைத்து, அவர்களால் படைப்பு, காப்பு, அழிப்பு முதலியவற்றைச் செய்வதாகவும் ஆசார்யர் சொல்கிறார்.
#Sathya001
___________________________________________
#ஸெளந்தர்யலஹரி-49
_______________________________________
எட்டு விதமான கண்ணோட்டம்:-
விசாலா கல்யாணீ ஸ்புடருசியோத்யா குவலையை:
க்ருபாதாராதாரா கிமபி மதுரா போகவதிகா
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார விஜயா
த்ருவம் தத்தன் நாம வ்யவஹரண யோக்யா விஜயதே !!
அம்பிகே!, உன் கண்கள் விசாலமாக இருப்பதால் விசாலா என்றும், மங்களகரமானதால் கல்யாணி என்றும், இந்தீவர புஷ்பங்களாலும் ஜெயிக்க முடியாத அழகுடையதால் அயோத்யா என்றும், கருணையினை தாரையாக பொழிய ஆதாரமாக இருப்பதால் தாரா என்றும், வர்ணிக்கமுடியாத மாதுர்யத்துடன் இருப்பதால் மதுரா என்றும், ஆழ்ந்த உணர்வினைத் தருவதால் போகவதீ என்றும், சகல உலகங்களையும் காப்பதால் அவந்தீ என்றும் கூறத்தக்கவாறு அந்த நகரங்களில் விஜயம் செய்து கொண்டு விளங்குகின்றன.
எட்டு விதமான த்ருஷ்டி:
1)விசாலா என்பது உள்ளாக மலர்ந்த பார்வை
2)கல்யாணீ ஆச்சரியத்தைக் காட்டுவது
3)அயோத்யா காமத்தை உண்டாக்குவது
4)தாரா ஆலஸ்யத்தைக் காட்டுவது
5)மதுரா ஸஞ்சலமானது
6)போகவதீ பிரியத்தோடு கூடியது
7அவந்தீ மயங்கியது
8)விஜயா பாதி மூடினது
இந்தப் ஸ்லோகத்தில் அம்பாளின் எட்டு விதமான த்ருஷ்டிகளுக்கு (பார்வைகளுக்கு), 8 நகரங்கள் உதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக சாமுத்ரிகா லக்ஷணங்களுடைய பெண்களின் பார்வையை இவ்வாறு பிரித்துச் சொல்வது வழக்கமாம். இந்த 8 விதமான பார்வைகளாவன; உள்ளார்ந்த, ஆச்சர்யமான, முழுதாக மலர்ந்த, களைப்போடு கூடிய, சஞ்சலமான, ப்ரியத்துடன் கூடிய, மயங்கிய நிலையில், மற்றும் பாதி மூடிய நிலையிலானதாம். இவை எல்லா பெண்களிடத்தும் இருந்தாலும், அன்னையிடத்து இவை இருப்பது, ஸம்க்ஷோபண, ஆகர்ஷண, த்ராவண, உன்மாதன, வச்ய, உச்சாடன, வித்வேஷண, மாரண சக்திகளைக் கூறிப்பதாக தேதியூரார் தமது விளக்கத்தில் சொல்லியிருக்கிறார்.
எட்டு நகரங்கள்:-
விசாலா, கல்யாணி, அயோத்யா, தாரா, மதுரா, போகவதி, அவந்தி, விஜயா
லோகத்திலுள்ள அத்தனை நகரங்களிலுமே அவள் த்ருஷ்டி பட்டாலும் ச்லோகத்தில் சொன்ன எட்டுக்குத் தான் அந்த த்ருஷ்டிக்குள்ள விசாலம், கல்யாணம் முதலிய குணங்களே பெயராக அமையும் பெருமை இருக்கிறது. கவியழகை முன்னிட்டு இதையே மாற்றி, இந்த நகரங்களின் பெயராலேயே குறிப்பிடத்தக்க யோக்யதை அந்த திருஷ்டிக்கு இருப்பதாக சொல்லி முடித்திருக்கிறார்: “தத் தத் நாம வ்யவஹறன யோக்யா விஜயதே” — ‘எந்தெந்த நகரங்கள் த்ருஷ்டியின் விஸ்தார திக்விஜயத்தில் வந்தனவோ அததன் பெயரிலும் வியவஹரிக்கத்தக்க தகுதியைப் பெற்றதாக அந்த த்ருஷ்டி விளங்குகிறது’ என்று அர்த்தம்.
நயனம்” என்றால் ‘அழைத்துப் போவது’. கண் வழிகாட்டி அழைத்துப் போவதால்தான் நாம் நடக்க முடிகிறது.
நேத்ர விசேஷத்தோடு க்ஷேத்ரப் பேரைப் பொருத்திக் காட்டி தேசம் பூரா ஒரு க்ஷேத்ராடனம் இந்த ச்லோகத்தின் மூலம் ஆசார்யாள் பண்ணி வைத்து விடுகிறார்.
லலிதா ஸஹஸ்ரநாமம் இதை
விசாலாக்ஷி, கல்யாணி,
துராதர்ஷா, போகினி, நிராபாதா, நிருபப்லவா, தயாமூர்த்தி, ரக்ஷாகரி, விஜயா ,
என்ற நாமாவளிகளில் குறிப்பிடுவதை காணலாம்.
இதையே அபிராமி பட்டர்
**விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு" என்கிறார்.
**ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியன் கடை உண்டு," அதாவது
அம்பாளின் கடைக்கண் பார்வையானது அவளை வணங்குபவரை யமனிடமிருந்து மீட்கும் என்கிறார் பட்டர்
#Sathya001
_________________ ___________________________
#ஸெளந்தர்யலஹரி-50
_______________________________
மூன்றாவது கண்
கவீனாம் ஸந்தர்ப்ப ஸ்தபக மகரந்தைக ரஸிகம்
கடாக்ஷ வ்யாக்ஷேப ப்ரமர கலபௌ கர்ணயுகலம்
அமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத தரலௌ
அஸூயா ஸம்ஸர்க்கா தலிக நயனம் கிஞ்சிதருணம் !!
கவிகளுடைய பாடல்களாகிய பூங்கொத்தின் மகரந்தத்தைப் பருகுவதிலேயே முக்கியமாக ஆசை வைத்த உன்னுடைய இரண்டு காதுகளையும் விடாமல் இருக்கும் நவரஸங்களையும் அநுபவிக்க ஆசைகொண்ட குட்டி வண்டுகள் போன்ற கடைக்கண்களை பார்த்து பொறாமையினால் உன்னுடைய நெற்றிக் கண்ணானது சிறிது சிவந்திருக்கிறதுபோலும்.
அம்பாளின் காதுகள் நீண்டு இருப்பதும், அவளை துதிக்கும் பக்தர்களது கோரிக்கைகளை எப்போதும் கேட்டுக்கொண்டு இருப்பதையும், அவளது கண்கள் பக்தர்களுக்கு கருணை மழை பொழிந்தவண்ணம் இருப்பதாகவும் , அக்னி ரூபமான நெற்றிக்கண் துர்மதியுடையவர்களை சுட்டெரிக்க ஏதுவாக சிவந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
லலிதா ஸஹஸ்ரநாமம் இவளை
"த்ரிநயனா" அதாவது மூன்று கண்கள் உடையவள் என்றும்
"வக்தர லக்ஷ்மீ பரீவாஹ சலந் மீநாப லோசநா "- அதாவது முகத்தின் அழகு வெள்ளத்தில் செல்லும் மீன்களை யொத்த கண்களுள்ளவள் என்றும் சொல்வதை காணலாம்.
அபிராமி பட்டர் , " அம்மை நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே "
என்று தனது அந்தாதியில் அம்பாளை புகழ்கிறார்.
#Sathya001
அடுத்த பதிவு எப்போது...
ReplyDelete