ஸெளந்தர்யலஹரி 51-----60
அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-51
____________________________________
சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா
ஸரோஷா கங்காயாம் கிரிச சரிதே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸெளபாக்ய ஜனனீ
ஸகீக்ஷு ஸ்மேரா தே மயி ஜனனீ த்ருஷ்டி: ஸகருணா
இந்த ஸ்லோகத்தின் நவரசங்களும் அம்பிகையின் கண்களில் தெரிவதாகச் சொல்லியிருக்கிறார்.
எப்போது எந்த ரசம் தெரியும் என்றும் கோடிட்டுக் காட்டுகிறார்.
பரமசிவனிடத்தில் சிருங்கார ரஸமும், மற்றவரிடத்தே பீபத்ஸ ரஸம் (வெறுப்பு), கங்கையிடத்து ரெளத்ரமும், ஈசனின் லீலைகளால் அத்புத ரஸமும், அவரது சர்பங்களால் பயமும், தாமரை போன்ற சிவந்த கண்கள் வீரத்தையும், தோழிகளிடத்து ஹாஸ்யமும், பக்தர்களிடத்து கருணையும் தெரிகிறதாம்.
அன்னை சாந்தமாக இருக்கையில் கண்களில் மாறுபாடு தெரிவதில்லை என்பதால் நவரசஸங்களில் அது பற்றி ஏதும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
ச்ருங்கார ரஸ ஸம்பூர்ணா
அவ்யாஜ கருணாமூர்த்தி
தரஸ்மேர முகாம்புஜா
வந்தாரு ஜந வத்ஸலா
ரமணலம்படா
ஸாந்த்ரகருணா என்றெல்லாம் சொல்வதை காணலாம்.
#Sathya001
********************
அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-52
மன்மத பாணங்களைப் போன்ற கண்கள்
கதே கர்ணாப்யாம் கருத இவ பக்ஷ்மாணி தததீ
புராம் பேத்துஶ் சித்தப்ரஶம ரஸ வித்ராவண பலே
இமே நேத்ரே கோத்ராதரபதி குலோத்தம்ஸ கலிகே
தவாகர்ணாக்ருஷ்ட ஸ்மரஶர விலாஸம் கலயத்: !!
மலையரசனான இமவானுடைய குலக்கொழுந்தே ! உன்னுடைய இக்கண்கள் இரண்டும் காதுகள் வரை நீண்டிருப்பதாலும், பாணங்களில் கட்டிய இறகுகளைப் போன்ற இமை மயிர்களை தரிக்கும் காரணத்தாலும் முப்புரம் எரித்த சிவபெருமானுடைய மனத்தின் சாந்தி ரஸத்தைக் கலைப்பதை நோக்கமாகக் கொண்டு காதுவரை இழுக்கப்பட்ட மன்மதபாணத்தின் திறமையை நடித்துக் காட்டுகின்றன.
சித்தப்ரஶம ரஸ வித்ராவண பலே:-
பரமசிவனுடைய சித்தத்தில் குடிகொண்டிருக்கும் சாஸ்திரத்தை கலைத்து ச்ருங்கார ரசத்தை தோற்றுவிப்பதயே பயனாக கொண்ட இரு கண்கள். இங்கே " பலே"
என்னும் பதம் சிலேடையாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது.
அம்பின் முக்கிய பாகமான எஃகு முனை "பலம்" எனப்படும். அப்படி கூரான பார்வை கொண்ட கண்கள்.
கதே கர்ணாப்யாம் :-
காதுவரை நீண்டிருக்கும் கண்கள் காதுவரை இழுத்துவிடும் மன்மத பாணங்களை போல் தோன்றுகின்றன.
இவ்விதம் தேவியினுடைய கண்ணழகைத் தியானம் செய்வதால் இருதயத்தில் உள்ள காமச் சிக்கல் அறுபட்டு ஒழியும்.
#Sathya001
***************†********
அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-53
___________________________________
மும்மூர்த்திகளைச் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப் படைத்த கண்கள்
விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜநதயா
விபாதி த்வந் நேத்ரத்ரிதயம் இதம் ஈசாநதயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிணஹரிருத்ராந் உபரதாந்
ரஜஸ்ஸத்வன் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ
அம்பிகே, அஞ்சனத்தை தரித்திருக்கும் உனது கண்கள் வெவ்வேறான நிறங்களில் (வெண்மை, சிகப்பு,கருப்பு) இருப்பதானது ப்ரளய காலத்தில் உன்னிடம் மறைந்து போன பிரம்மா, விஷ்ணு ருத்ரர்களை திரும்பவும் ஸ்ருஷ்டி செய்வதற்காக வேண்டிய ரஜஸ், ஸத்வ, தமோ குணங்களோடு கூடியதாக இருக்கிறது.
அம்பிகையின் இரு-கண்களாக சூர்ய-சந்திரர்களும், நெற்றிக்கண்ணாக அக்னியும் இருப்பதாகச் சொல்லப்படும். இங்கே அன்னையின் கண்களைப் பற்றி வர்ணித்து, அதன் நிறங்களை மும்மூர்த்திகளுக்கு உரியதாகச் சொல்லியிருக்கிறார். சாதாரணமாக நமது கண்களில் கருவிழிகள் கருப்பாகவும், வெண்மை நிறைந்த பகுதியில் சிவப்பான நரம்புகளும் இருக்கிறது. இந்த நிறங்கள் முறையே ரஜஸ், ஸத்வ, மற்றும் த்மோ குணங்களுக்கானது. இதே போல ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகியோர் அன்னையின் ரஜஸ் ஸத்வ, மற்றும் தமோ குணங்களாகச் சொல்லுகிறார் இந்த ஸ்லோகத்தில். மஹா பிரளய காலத்தில் இவர்கள் மூவரும் அழிந்து ஜகதீஸ்வரியிடத்தில் சேர்வதாக சொல்கிறார் ஆசார்யாள்.
சக்தி கண்ணசைத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழிலையும் தொடங்குவார்களாம். சக்தி மறுபடி கண்ணசைத்தால் நிறுத்துவார்களாம்.
அதனால் சக்தியை விடச் சிறந்த தெய்வம் வேறு இல்லை என்ற கருத்தில் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது
ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா
கோப்த்ரீ கோவிந்தரூபிணீ ||
ஸம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதாநகரீச்வரீ |!
என்று லலிதா ஸஹஸ்ரநாமம் கூறுவதை பார்க்கலாம்.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
#Sathya001
**********************************
அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-54
_____________________
மூன்று புண்ணிய நதிகளைப் போன்ற கண் ரேகைகள்
பவித்ரீகர்த்தும் ந: பசுபதிபராதீந ஹ்ருதயே
தயாமித்ரைர் நேத்ரை: அருணதவள ச்யாமருசுபி:
சோணோ கங்கா தபநதநயேதி த்ருவம் அமும்
த்ரயாணாம் தீர்த்தானாம் உபநயஸி ஸம்பேதம் அநகம்
அம்மா!, பசுபதியிடத்து மனதை உடையவளே, உலகத்தை பரிசுத்தமாக்கும் சோணா, கங்கை மற்றும் காளிந்தீ ஆகிய நதிகளின் சங்கமம் போன்று இருக்கும் உனது கண்களானது அந்த நதிகளைப் போன்றே சிகப்பு, வெண்மை மற்றும் கருமை நிறங்களுடன் என்னைப் போன்றவர்களை புனிதர்களாக்குவதற்கு கருணையுடன் இருக்கிறது.
சோணா நதீ என்பது சிகப்பு நிறம் உடையதாம்; கங்கை வெண்மையானது; யமுனையின் இன்னொரு பெயரே காளிந்தீ, இது கருப்பு நிறமானது. இவை போன்ற நிறங்களைத் தனது கண்களிலேயே கொண்டிருக்கிறாளாம் அன்னை. இந்த நதி சங்கமிக்கும் இடமானது எப்படி அங்கு ஸ்நானம் செய்பவர்களது பாபத்தைப் போக்குகிறதோ, அதே போல அம்பாளது கண்கள் பக்தர்களது எல்லா பாபங்களையும் போக்கிடும் என்கிறார் பகவத் பாதர்.
#Sathya001
*******************************
அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-55
_______________________________
கண்கள் முடாமல் இருக்கும் காரணம்
நிமேஷோந்மேஷாப்யாம் ப்ரளயமுதயம் யாதி ஜகதீ
த்வேத்யாஹு: ஸந்தோ தரணிதர ராஜந்ய தநயே
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதிதம் அசேஷம் ப்ரளயத:
பரித்ராதும் சங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருச: !!
ஹே! பர்வதராஜ புத்ரி, உனது கண்கள் திறப்பதால் லோகங்கள் ஸ்ருஷ்டியாகின்றன என்றும், மூடுவதனால் அழிகின்றன என்றும் சாதுக்கள் சொல்கின்றனர். உனது கண்கள் திறந்திருக்கும் போது உண்டான லோகங்கள் அழிந்துவிடக் கூடாது என்பதால்தான் உனது கண்களை மூடாது இருக்கிறார் என்று தோன்றுகிறது
தேவதைகள் கண்கொட்டுவதில்லை. பரதேவதை இயற்கையாகவே கண்கொட்டாமல் இருந்தபோதிலும் அது உலக ரக்ஷணத்துக்காக என்று இங்கே உபசரித்துக் கூறப்படுகிறது.
அநிமிஷா என்றால் இமைகளால் கண்களை மூடாதிருத்தல். தேவர்களுக்கு அநிமிஷா என்றே பெயர் உண்டு. லலிதா சஹஸ்ரநாமத்தில் "உன்மேஷநிமிஷோத்பந்ந விபந்ந புவனாவளி" என்று ஒரு நாமம் இருக்கிறது. இதன் பொருள், அம்பிகை கண்களைத் திறப்பதால் புவனத்தின் ஸ்ருஷ்டியும், முடும் பொழுது பிரளய/ஸம்ஹாரமும் நடக்கிறது என்று பொருள்
#Sathya001
********************************
அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-56
_____________________________
தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா:
நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா: சபரிகா:
இயம் ச ஸ்ரீர் பத்தச் சத புடக வாடம் குவலயம் !
ஜ்ஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி !!
அம்பிகே! அபர்ணா!, காதுகளை அடுத்து நீண்டிருக்கும் உனது கண்கள், காதுகளில் தங்களைப்பற்றி கோள் சொல்லுகின்றனவோ என்று பயந்த மீன்கள் மூடாத கண்களுடன் நீரிலேயே ஒளிந்து கொண்டிருக்கின்றன. உனது நேத்ரங்களில் வாசம் செய்யும் லக்ஷ்மியும் பகலில் நீலோத்பலங்களை விட்டு உன் கண்களுக்கு வந்திருந்து, இரவில் நீலோத்பலங்கள் மலர அப்புஷ்பங்களில் எழுந்தருளுகிறாள்.
மீனலோசனி, மீனாக்ஷி போன்ற பெயர்களை குறிக்கும் ஸ்லோகம் இது. அன்னையின் கண்களை மீன்களுக்கும், நிலோத்பல மலருக்கும் உவமையாகச்
சொல்கிறார். அன்னையின் கண்கள் காதுவரை நீண்டு இருப்பது மீனைப் போல் இருக்கின்றதாம். முந்தைய ஸ்லோகத்தில் அன்னை தனது கண்களை மூடுவதில்லை என்றார், இங்கு மீன்களைச் சொல்கிறார். மீன்களும் கண்களை மூடுவதில்லை.
இந்த ஸ்லோகத்தில் அன்னையை அபர்ணா என்று கூறி விளிக்கிறார். "அபர்ணா" என்ற நாமத்திற்கு இரு பொருட்கள் உண்டு. பக்தர்கள் கேட்கும் வரங்களை அளித்து, அவர்களுக்கு ருணங்களை தீர்ப்பதால் அபர்ணா.
அன்னை பார்வதியாகப் பிறந்து தபஸ் பண்ணும் சமயத்தில் இலையைக் கூட உண்ணாது கடுந்தவம் புரிந்தாளாம். பர்ணா என்றால் இலை, அபர்ணா என்றால் இலையையும் தவிர்த்தவள் என்று பொருள். [அபர்ணா து நிராஹாரா தாம் மாதா ப்ரத்யபாஷத: - ப்ரம்ம புராணம்] தவத்தின் போது இலையைக் கூட உண்ணாது தவிர்த்ததால் அபர்ணா என்று பொருள். பாஸ்கர ராயரது மனைவி, ஏழ்மையால் உண்ணவும் ஏதுமின்றி இருக்கையில் ராயர் அன்னையை 'அபர்ணா' என்றழைத்தவுடன் அவரது ருணத்தை தீர்க்க அன்னையே வந்ததாகச் சொல்வது நினைவுக்கு வருகிறது.
அன்னை பார்வதியாகப் பிறந்து தபஸ் பண்ணும் சமயத்தில் இலையைக் கூட உண்ணாது கடுந்தவம் புரிந்தாளாம். பர்ணா என்றால் இலை, அபர்ணா என்றால் இலையையும் தவிர்த்தவள் என்று பொருள். [அபர்ணா து நிராஹாரா தாம் மாதா ப்ரத்யபாஷத: - ப்ரம்ம புராணம்] தவத்தின் போது இலையைக் கூட உண்ணாது தவிர்த்ததால் அபர்ணா என்று பொருள். பாஸ்கர ராயரது மனைவி, ஏழ்மையால் உண்ணவும் ஏதுமின்றி இருக்கையில் ராயர் அன்னையை 'அபர்ணா' என்றழைத்தவுடன் அவரது ருணத்தை தீர்க்க அன்னையே வந்ததாகச் சொல்வது நினைவுக்கு வருகிறது.
மீன் ஏன் எப்போதும் ஆற்றின் மேல் மட்டத்தில் நீந்தாமல் உள்ளுக்குள்ளேயே நீந்திக்கொண்டிருக்கிறது?இதற்கு இங்கே ஆசார்யாள் ஒரு காரணம் கல்பிக்கிறார். காதளவோடும் அம்பாளின் கண்களை மீன்கள் பார்த்தன. லோகத்தில் ஒரு புல் பூண்டு புழு பூச்சிகூட விட்டுப் போகாமல் ஜகன்மாதா விழிகளை ஸகல திக்குகளிலும் திருப்பிக்கொண்டிருக்கிறாள். அப்போது ஒவ்வொரு சமயம் அவை கண்கோடிக்கு வரும்போது காதைத் தொட்டுவிடும் போலிருக்கிறது. அப்போது அவை காதிடம் ரஹஸ்யம் பேசுகிற மாதிரி மீன்களுக்குத் தோன்றுகிறது என்ன ரஹஸ்யம்?உருவத்தில் இந்த மீன்கள் அம்பாளுடைய அந்தக் கண் மாதிரித்தான் இருக்கின்றன. ஸமஸ்த லோகாநுக்ரஹத்துக்காக எந்த ஜீவனும் விட்டுப் போய் விடக் கூடாது என்று, அந்தக் கண்கள் ஓயாமல் சஞ்சரிப்பதைப் பார்த்து அதே போலத்தான் இந்த மீன்களும் ஓயாமல் ஒழியாமல் சஞ்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. இதனால்தான் மீன்களுக்கு பயம் வந்து விடுகிறது. அம்பாளுடைய கண்கள் அவளுடைய காதிடம், "மீன்கள் என்னோடு போட்டி போடுகின்றன"என்று ரஹஸ்யமாகக் கோள் சொல்கின்றனவோ என்று பயம்!
இந்த பயத்தில்தான் நீர் மட்டத்தின் மேல் பரப்பில் நீந்தாமல் அவை உள்ளுக்குள் மறைவாக முழுகிவிடுகின்றன!
வக்த்ர லக்ஷ்மீ பரீவாஹ சலன் மீநாபலோசநா என்று லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வதை காணலாம்.
வக்த்ர லக்ஷ்மீ " என்றால் (அம்பாளுடைய) முககாந்தி. அது ஒரு பெரிய பிரவாஹமாக இருக்கிறது, 'பரீவாஹம்'என்றால் பிரவாஹம்.
நீண்டு நீண்டு விளங்கும் அம்பாளுடைய நேத்திரம் இருக்கிறதே அதுதான் மீன். லோசனம் என்றால் கண்.மீன் மாதிரி வடிவத்தில் இருக்கிற லோசனம் - மீநாப லோசநம் . ரூபத்தில் மீன் மாதிரி இருப்பது மட்டுமின்றி, பிரவாஹத்தில் மீன் இருக்க வேண்டும் என்ற நியாயத்தின்படியும் ஸெளந்தர்ய ப்ரவாஹமான அம்பாள் இப்படிப்பட்ட கண்ணை உடையவளாயிருக்கிறாள்.
இந்த ஸ்லோகத்தில் தேவி மீனாக்ஷியை வர்ணிக்கிறது.
அம்பிகையின் நேத்ரங்களுக்கு மத்ஸ்யத்தை ஒப்புவமை சொல்லி, அது ஒளிந்து கொண்டதாகவும் கூறுகிற 'ஸெளந்தர்ய லஹரி'ஸ்லோகத்தில் ஆசார்யாள் மீனாக்ஷியைத்தான் ஒளித்து ரஸசனையாகக் குறிப்பிடுகிறார்!
#Sathya001
- *****************"""""***†*
அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-57
____________________________________
எங்கும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு போன்ற கடாக்ஷம்
த்ருவா த்ராகீயஸ்யா தரதளித நீலோத் பலருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி சிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநிரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர: !!
மங்களங்களை அருள்பவளே!, சந்திரன் வனம் மற்றும் மாளிகை என்ற பேதம் இல்லாது எங்கும் சமமாகத் தன் கிரணங்களை வீசுவது போல, தீர்க்கமானதும், அன்றலர்ந்த நீலோத்பல புஷ்பத்தைப் போன்ற காந்தியுடையதுமான உன் கண்களின் கடாக்ஷ த்ருஷ்டியானது உன்னிலிருந்து விலகி தூரத்தில் இருப்பவனும், பாக்கியமில்லாதவனுமான என் மேலும் விழும்படி செய்வாயாக. இவ்வாறு செய்வதால் உனக்கு எந்த குறைவும் ஏற்படாது.
சந்திரனது கிரணங்கள் எப்படி எந்த வேற்றுமையும் பாராட்டாது எல்லா இடங்களிலும் குளிர்ச்சியுடைய ஒளியைப் பரவச் செய்கிறதோ அப்படியாக அன்னையவள் கருணை எவ்வித வித்தியாசமும் இல்லாது எல்லோருக்கும் அருள் தரக் கூடியது என்று கூறுகிறார் சங்கரர்.
#Sathya001
************************
அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-58
_________________________________
மன்மதபாணம் போன்ற கடைக்கண் பார்வை
அராலம் தே பாலீயுகல மகராஜன்யதனயே
ந கேஷா மாதத்தே குஸுமஶர கோதண்ட குதுகம்
திரஶ்சீனோ யத்ர ஶ்ரவணபத முல்லங்க்ய விலஸன்
அபாங்க வ்யாஸங்கோ திசதி ஶரஸந்தான திஷணாம் 58
பர்வதராஜகுமாரியே ! உன்னுடைய வளைந்த காதுக்கும் கண்ணுக்கும் இடையே உள்ள பிரதேசம் இரண்டும் புஷ்ப பாணனான மன்மதனுடைய வில் என்ற நம்பிக்கையை யாருக்குத்தான் உண்டாக்காது ? அந்தப் பிரதேசத்தில் குறுக்காகச் செல்லுகின்ற கடைக்கண் பார்வை காது வழியாக ஊடுருவிப் பாய்வதாய் விளங்கிக்கொண்டு பாணம் தொடுக்கப்பட்டுள்ளது என்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.
#Sathya001
******************************
அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-59
__________________________
ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித தாடங்கயுகளம்
சது:சக்ரம் மந்யே தவ முகமிதம் மந்மதரதம்
யமாருஹ்ய த்ருஹ்யத்வநிரதம் அர்கேந்துசரணம்
மஹாவீரோ மார: ப்ரமத பதயே ஸஜ்ஜிதவதே !!
அம்மா!, உனது தாடங்கங்கள் கன்னத்தில் ப்ரதிபலிப்பதால் முகமானது நான்கு சக்ரங்களுடன் கூடிய மன்மதனது ரதம் போன்று காக்ஷி அளிக்கிறது. இது போன்ற ரதத்தில் இருப்பதால்தான் மன்மதன், ஸுர்ய-சந்திரர்களை சக்ரங்களாகக் கொண்ட பூமி என்னும் ரதத்தில் ஏறிக்கொண்டு யுத்த சன்னாஹத்துடன் இருப்பவரும், ப்ரமத கணங்களால் சூழப்பட்டவருமான பரமசிவனுடனேயே போர் புரியத் தயாராகிறான்.
இந்தப் பாடல் அன்னையின் கன்னங்களை வர்ணிப்பதாக அமைந்துள்ளது. அம்பிகையின் கன்னங்கள் வழுவழுப்பாக கண்ணாடி போல் இருக்கிறதாம். அதனால் காதில் இருக்கும் தாடங்கங்கள் கன்னதில் பிரதிபலித்து நான்கு சக்கரங்களாகத் தெரிகிறது என்கிறார். இந்த நேரத்தில் பகவத்பாதாள் திருவானைக்காவலில் அன்னையின் உக்ரத்தை தணிக்க ஸ்ரீ சக்ரங்களால் ஆன தாடங்கங்களைச் சாற்றியது நினைவுக்கு வருகிறது. இன்றும் காஞ்சி ஆசாரியார்கள் இந்த தாடங்கப் பிரதிஷ்டையைச் செய்து வருகின்றனர்.
மன்மதன் போர் புரிய உபயோகிக்கும் ரதம் இது போன்று என்று கூறியபின், பரமசிவனது த்ரிபுர சம்ஹாரத்திற்கு உபயோகித்த ரதத்தைப் பற்றிக் கூறுகிறார். அதாவது த்ரிபுர சம்ஹாரத்தின் போது பூமியே ரதத்தின் தட்டாகவும், சூர்ய-சந்திரர்களே சக்கரங்களாகவும் இருந்தனராம். அப்படியான சிறப்புமிக்க ரதத்தைக் கொண்ட சிவபெருமானையே தனது காம பாணங்களால் எதிர்க்கும் துணிச்சல் மன்மதனுக்கு வந்தது என்றால், அதன் காரணம் அன்னையின் வதனமே! என்று கூறுகிறார்.
ஶீ லலிதா ஸஹஸ்ரநாமம்
"பத்மராக ஶிலாதர்ஶ பரிபாவி கபோலபூஃ |
னவவித்ரும பிம்பஶ்ரீஃ ன்யக்காரி ரதனச்சதா !!"
நிர்மலமாயும் ப்ரதிபிம்பத்தை காட்டக்கூடியதாயும் இருப்பதில் பத்மராக ரத்னத்தில் செய்யப்பட்ட கண்ணாடியை அதிசயித்த கன்னங்களை உடையவள்.
என்று கூறுவதை காணலாம்.
#Sathya001
*********************"********
அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-60
_____________________________________
ஸரஸ்வத்யா: ஸுக்தீரம்ருதலஹரீ கெளசல ஹரீ:
பிபந்த்யா: சர்வாணி ச்ரவண சுளுகாப்யாம் அவிரளம் சமத்காரச்லாகா சலிதசிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ் தாரை: ப்ரதிவசநமசஷ்ட இவ தே
அம்மா!, பரமசிவன் பத்னியே, அம்ருதம் போன்ற இனிமையாக உனது பேச்சுக்களை இடைவிடாது கேட்டுக் கொண்டு இருக்கும் சரஸ்வதி தேவி, கேட்கும் ஆவலில் தலையை அசைத்த வண்ணம் இருக்கிறாள். அவ்வாறு தலையை அசைக்கும் சமயத்தில், அவள் தன் காதுகளில் அணிந்திருக்கும் குண்டலங்கள் அசைகிறது. அவ்வாறு சரஸ்வதியின் குண்டலங்கள் அசைவது, அவை உங்களது பேச்சுக்களை ஜணத்கார சப்தம் கொடுத்து ஆமோதிப்பது போல இருக்கிறது.
அன்னையின் குரல் இனிமையைக் குறிப்பதான ஸ்லோகம் இது. அம்பிகையின் பேச்சு அம்ருதத்தினைப் போல இருக்கும் என்கிறார். சரஸ்வதி அன்னையின் அருகில் எப்போதும் இருப்பதாகச் சொல்லி, அவள் அன்னையின் அம்ருத பிரவாஹத்தை விஞ்சும் இனிய குரலோசையை கைகளால் உணவை அள்ளி-அள்ளி உண்பது போல தலையை ஆட்டிக் கொண்டு காதுகளால் கேட்கிறாளாம். அப்போது சரஸ்வதியின் காதுகளில் இருக்கும் குண்டலங்களால் ஏற்படும் சப்தம் அன்னையின் பேச்சை கேட்டு வியந்து பதிலாக புகழ்ச்சி கோஷம் செய்வது போல இருக்கிறதாம்
ஸரஸ்வதியின் பாட்டைக் கேட்டு ரஸித்து அம்பிகை சிரஃகம்பம் செய்யும் போது காதிலுள்ள குண்டலங்கள் ஜண ஜணவென்று சப்திக்கும் அல்லவா? இதைக் ‘காது’ என்கிற ஒன்று ஸரஸ்வதியை சிலாகித்துச் சொல்லும் ஆமோதன வார்த்தை என்கிறார்.
#Sathya001
Comments
Post a Comment