ஈசனின் அஷ்டாஷ்ட மூர்த்தங்கள்

ஈசனின் அஷ்டாஷ்ட மூர்த்தங்கள்
_____________________________________________
1) லிங்கமூர்த்தி     - திருவிடைமருதூர்
____________________________________________

நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிஷ்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிஷ்கள நிலையையே நாம் லிங்கம் என்போம். லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள மகாலிங்க தலம் என்று சிறப்பு பெயர் பெற்ற    திரு  இடைமருதூர் ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும். வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும்.

,இங்கு உறையும் இறைவன்

மகாலிங்கேஸ்வரர்.

இறைவி - பெருநலமுலையம்மையார் , ப்ருஹத் சுந்தரகுசாம்பிகை

______________________________________

2). லிங்கோத்பவர்
_________________________
   நான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது   ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க சென்றார். உடன் தேவலோகத்தினரும் மகலோகம்  சென்றனர். அப்பொழுது பெரும் கடற்பெருக்குத் தோன்றி உலக உயிர்கள் அனைத்தையும் அழித்தது. அதனால் உலகம் மறைந்து விட்டது. திருமால் ஒரு ஆலிலைமேல் சின்னஞ் சிறிய குழந்தை வடிவத்துடன் உறங்கினார். இதனை கண்ணுற்ற அனைவரும் குழந்தையை ஆராதித்தனர். ஆராதனையைக்கேட்டு எழுந்த திருமால் பழைய உலகைத் தேடினார். அது பாதாளத்தில் இருப்பதைக் கண்டார். உடன் வராக அவதாரம் எடுத்து தனது கொம்பினால் குத்திக்கொண்டு வந்து முறைப்படி நிறுத்தினார். பின் பாற்கடலில் நித்திரையில் ஆழ்ந்தார். இதனிடையே நான்முகனுக்கு இரவு நீங்கி பகல் ஆரம்பமானது. அனைத்து தேவ மாந்தர்களையும் ஈரேழுலகங்களையும் திரட்டி இந்திரனையும் சபை நிறுத்தி அரசாள செய்தார். இடையில் ஏற்பட்ட சம்பவம் தெரியாததால் , இந்த உலக இயக்கம் தன்னாலே எனக் கர்வம் கொண்டார். தானே முழுமுதற்கடவுள் என்ற எண்ணத்துடன் உலகை வலம் வரும் போது பாற்கடலில் யோக நித்திரையில் திருமால் இருப்பதைக் கண்டு அவரிடம் சென்று நீ யார்? என வினவினார். அவரோ நான் உனது தந்தை என்றார், இதனால் பெரும் வாக்குவாதம் இருவருக்கும் ஏற்பட்டது. அது யார் பெரியவர் என்றளவில் பெரும் போட்டியானது.இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூறி வானுக்கும் மண்ணுக்கும் எட்டாத  ஜோதி வடிவாய்  தோன்றினார்.
திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.

     திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, முற்றும் உணர்ந்த சிவபெருமான், பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மஹாசிவராத்திரி நாளாகும்

இங்குள்ள அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது. ஜோதி பிழம்பாக இருந்த சிவபெருமான் திருமாலும், பிரம்மனும் பணிந்து பிரார்த்திக்க அவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி சிவபெருமானே சிவலிங்க திருஉருவம் கொன்டு மலையின் அடிப்பாகத்தில் அடைந்துள்ள இடம் இத்திருக்கோயில் ஆகும்

ருக்வேதசம்ஹிதை, சரபோப நிஷத், லிங்க புராணம், கூர்ம புராணம், வாயுபுராணம், சிவ மகா புராணம், உபமன்யு பக்த விலாசம், மகா ஸ்காந்தம், நாரதம் மற்றும் தமிழில் கந்த புராணம், அருணகிரி புராணம், சிவராத்ரி புராணம், அருணாசல புராணம் ஆகிய நூல்களிலும், ஆகமங்கள் பலவற்றிலும் அடி- முடி தேடிய கதை விவரிக்கப்பட்டுள்ளது.

லிங்க பாணத்தின் நடுவில், சந்திரசேகர் திரு மேனி போல் அமைந்திருப்பதே லிங்கோத்பவ வடிவம். இதில், திருமுடியும் திருவடியும் மறைக்கப்பட்டிருக்கும். இரண்டு, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடன் சிவனார் திகழ... பிரம்மாவும் திருமாலும் இருபுறமும் வணங்கிய நிலையில் இருப்பர். சிவாலயங்களில் கருவறைக்குப் பின்புறச் சுவரில், லிங்கோத்பவ மூர்த்தியை அமைக்கும் வழக்கம், முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே இருந்துள்ளது. லிங்கத்தின் நடுவில்- சிவபெருமானும், மேல் பகுதியில்- அன்ன பட்சியாக பிரம்மனும், கீழ்ப்பகுதி யில்- வராகமாக திருமாலும் உள்ள லிங்கோத்பவ வடிவை பல கோயில்களில் காணலாம்.

க்ஷேத்ரம் : திருவண்ணாமலை

இறைவன்: அருணாசலேஸ்வரர் ,
அண்ணாமலையார்.

இறைவி: அபிதகுசலாம்பாள்
உண்ணாமலை  அம்மன்


____________________________________






Comments

Popular posts from this blog

ஸ்ரீ ருத்ரம்

தர்ம சாஸ்திரம்

அர்த்தமுள்ள ஸந்தியாவந்தனம்: