ஸெளந்தர்யலஹரி 27 -30
#ஆனந்த அலை-27
ஸமயாசார மானஸிக பூஜை:-
ஜபோ ஜல்ப:சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனத்யாஹுதி-விதி: I
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
சபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம் ii
ஆத்ம ஸமர்ப்பண பாவனையால், வெறும் பேச்சு ஜபமாகவும், கைத்தொழில் அனைத்தும் முத்திரைகளின் விளக்கமாகவும், நடை ப்ரதக்ஷிணம் செய்வதாயும், உண்டி முதலியன ஹேமமாகவும் , படுத்துக்கொள்ளுதல் நமஸ்காரமாகவும், இன்னும் சுகமான முயற்சியின்றி எனது செயல் எது உண்டோ அது எல்லாம் உன்னுடைய பூஜை முறையாகவும், ஆகட்டும்
முத்திரைகள்- "தச முத்ரா ஸமாராத்யா" என்ற லலிதா ஸஹஸ்ரநாமாவளிக்கு ஏற்ப ஶீ வித்தையில் பத்து முத்திரைகள் அம்பாள் ஆராதனையில் முக்யமானவை. அவை
ஸர்வ ஸம்க்ஷோபிணீ ஸர்வ வித்ராவிணி, ஸர்வாகர்ஷிணீ, ஸர்வ வசங்கரீ, ஸர்வோன்மாதினீ, ஸர்வமஹாங்குசா, ஸர்ச கேசரீ, ஸர்வ பீஜே, ஸர்வ யோனி, ஸர்வத்ரிகண்டா.
கை விரல்களின் இயக்கம் எப்படியிருந்தாலும் அவை எல்லாம் ஞானிகள் விஷயத்தில் முத்திரைகள் காட்டியதாகவே ஆகின்றன. ஸமயாசாரத்தைக்கொண்ட ஞானிகள் வெளிப்படையாக ஶீ சக்ரத்திலோ, பிம்பத்திலோ குறிப்பிட்ட முறைப்படி பூஐை செய்வதில்லை. அவர்கள் இயற்கையாக செய்யும் செயல்கள் எல்லாம் பூஜையாகவும், பேசும் பேச்செல்லாம் துதியாகவும் ஆகின்றன.
இந்த ஸ்லோகம் ஸஹஜ ஸ்திதி யோகம் என்னும் ஆத்ம ஞான வித்தையை போதிக்கிறது.
அபிராமி பட்டரும் ,தனது அந்தாதியில் ,
நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.
இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால்
ஆத்ம ஞான ஸித்தி பெறலாம்.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
***************************************
#ஆனந்த அலை-28
தேவியின் தாடங்க மகிமை:-
,ஸுதா மப்யாச்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதி-சதமகாத்யா திவிஷத: I
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா
ந சம்போஸ் தன் மூலம் தவ ஜனனி தாடங்க-மஹிமா ii
பயங்கரமான மூப்பு மரணங்களை விலக்குகிற அமிர்தத்தை சாப்பிட்டும்கூட பிரம்மா, இந்திரன் முதலிய எல்லா தேவர்களும் பிரளய காலத்தில் அழிவுறுகிறார்கள். கொடிய விஷத்தை சாப்பிட்ட சிவனுக்கு காலத்தின் முடிவு இல்லை என்றால், அதன் காரணம் உன்னுடைய காதிலுள்ள தாடங்கத்தின் மஹிமைதான்.
ஶீ ருத்ரம் " யாதே ருத்ர சிவா தனூ: சிவா விச்வாஹ பேஷஜி ! சிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ரட ஜீவஸே ! "
அதாவது பரமசிவனே ! எந்த பராசக்தி உனது பாதி சரீரம் உடையவள் ஆகிறாளோ அவள் உலகனைத்துக்கும் மருந்து. ருத்ரனாகிய உனக்கும் மருந்து. விஷத்தை உண்டும் அவள் அருளால்தான் எங்களுக்காக பிழைத்து இருக்கிறாய் என்று கூறுவதை காணலாம்.
கால ஸ்வரூபிகளான சூரிய ,சந்திரர்கள் உலகில் உள்ளவர்களின் ஆயுளை நாள்தோறும் விழுங்குபவர்கள் ஆயினும் அவர்கள் தேவியிடம் அடங்கி, அவளுடைய அங்கங்களாகவும், ஆபரணங்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.
அருணா மோதினீ - இதனாலேயே பதிவிரதைகள் ஒருநாளும் காதில் தாடங்கம் இல்லாமல் இருக்கக்கூடாது என்று உறைக்கிறது.
தேவியின் தாடங்கம் சாக்ஷாத் ஶீ சக்ர ரூபமே.
இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட அம்பாள் திருவானைக்கா க்ஷேத்ரத்தில் உறையும் சாக்ஷாத் ஶீ அகிலேண்டேஸ்வரீ யாகும். அகிலேண்டேஸ்வரீ வாராஹி ஸ்வரூபம். அம்பாள் மிகவும் உக்ர மூர்த்தியாக இருந்த காலத்தில், ஆதிசங்கரர் இந்த க்ஷேத்ரத்திற்கு திக்விஜயம் செய்தார். இங்கு பச்சை மரத்தில் அம்பிகையின் கோபத்தை தனித்து அம்பாள் காதில் சிவ சக்ரத்தையும், ஶீ சக்ரத்தையும் பிரதிஷ்டை செய்தார். அம்பாளின் நேர் எதிரே ஜேஷ்ட குமாரன் கணபதியையும் ஸ்தாபிதம் செய்தார். அதன்பிறகு அம்பாள் அந்த திவ்ய க்ஷேத்ரத்தில் அவ்யாஜ கருணாமூர்த்தியாக விளங்குகிறாள்.
இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால் விஷ பயம், அகால ம்ருத்யு நிவாரணம் பெறலாம்.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
***************************
#ஆனந்த அலை- 29
தேவி பரமசிவனை வரவேற்கும் வைபவம்:-
கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடோரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி-மகுடம் i
ப்ரேணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப-முபயாதஸ்ய பவனம்
பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்திர்-விஜயதே ii
எதிரில் உள்ள பிரம்மாவினுடைய கிரீடத்தை விட்டு விலகி வாருங்கள். கைடபாசுரனை கொன்ற விஷ்ணுவினுடைய கடினமான கிரீடத்தில் இடறிக்கொள்ளப் போகிறீர்கள். இந்திரனுடைய கிரீடத்தை ஒதுக்கிவிட்டு வாருங்கள் என்று இவ்வாறாக பிரம்மா முதலியோர்கள் நமஸ்காரம் செய்து கொண்டிருக்கும்போது, உனது இருப்பிடத்திற்கு வந்து கொண்டிருக்கும் பரமசிவனை நோக்கி பரபரப்புடன் நீ எழுந்து எதிர்கொண்டு செல்லும்போது, உன்னுடைய சேடிகள் சொல்லும் வார்த்தை சிறப்பாக ஒலிக்கிறது.
பிரம்மாதி தேவர்களும் உய்யும் பொருட்டு அம்பாளின் காலடியிலேயே நமஸ்கறித்துக் கொண்டு இருப்பதை மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது இந்த ஸ்லோகம்.
இதை அபிராமி பட்டர்,
ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.
என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் போற்றித் துதிப்பர்.
என்று கூறுகிறார்.
இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால்
ப்ரசவாரிஷ்ட நிவர்த்தியும் ,மூர்க்க குணம் உடையவரை வசப்படுத்துதலும் சித்திக்கும்.
🙏🏼🙏🏼🙏🏼
***********************
#ஆனந்த அலை-30
தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல்:-
ஸ்வேதேஹோத்பூதாபிர்-க்ருணிபி-ரணிமத்யாபி-ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா பாவயதி ய: I
கிமாச்சர்யம் தஸ்ய த்ரிநயன-ஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸவர்த்தாக்னிர்-விரசயதி நீராஜன-விதிம் ii
ஆதி அந்தமில்லாத தாயே உன்னுடைய கரணங்கள் லிருந்து வெளிவரும் கிரணங்களாகிய அணிமா மஹிமா போன்ற 8 சக்திகளால் சூழப்பட்டவளே உன்னை எவன் எப்போதும் மனதில் தியானம் செய்கிறானோ, அவனுக்கு சிவ சாயுஜ்ய பதவிகூட ஒரு வரண்ட புல் போல தோன்றும்.! மஹா ப்ரளய கால அக்னி அவனுக்கு மங்கல ஆரத்தி செய்திடும் என்பதில் என்ன ஆச்சரியம்? !
எட்டு சக்திகளும் அதன் சித்திகளும்:-
1) அணிமா :-உடலை மிகச்சிறிய அணுவின் அளவிற்கு சுறுக்கவது .
2)மஹிமா :- அனு அளவிலிருந்தோ, சாதாரண நிலையிலிருந்தோ மிகப்பெறிய உருவமாக விரிவது.
3) லகிமா :- கனத்த உடலை காற்றைப்போல லேசானதாக ஆக்கி பறக்க வல்லது
4) கரிமா :- சாதாரண அல்லது காற்றுப் போன்ற உடலை பாறையைப் போல கணமாக ஆக்குவது
5) ப்ராப்தி :- எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி தன் வசமாக்கிக் கொள்ளுதல்.
6)ப்ராகாம்யம் :- கூடு விட்டு கூடு பாய்தல். தன் உடலில் இருந்து ஆன்மாவை பிரித்து வேறு உடலுக்குள் புகுதல்
7) ஈசித்வம் :-
நான்முகன் முதலான அனைத்து தேவர் களையும் தன் அதிகாரத்தில் வைக்கும் தகுதி
8) வசித்வம்:- நினைத்து எல்லாவற்றையும் உடனே தன் வசமாக்குவது.
இவை அனைத்துமே அம்பாள் உபாசனுக்கு சாத்யமாவதால் அவனுக்கு உலக விஷயங்கள் எல்லாம் சாதாரணமாக ஆகிறது.
இந்த ஸ்லோகம் பாராயணம் செய்வதால்
ப்ராகம்யம் என்னும் பரகாய ப்ரவேசம் சாத்யப்படும்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Comments
Post a Comment